திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மூத்த அண்ணனும், ஓய்வுபெற்ற பொறியாளருமான ராஜசேகரனின் மனைவி அமல் ராஜசேகரன் வயது மூப்பு காரணமாகக் காலமானார்.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியப்பாவும், பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மூத்த அண்ணனுமான ராஜசேகரனின் மனைவி அமல் ராஜசேகரன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகரின் மூத்த அண்ணன் ராஜசேகரன், பெல் (BHEL) நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ள நிலையில், மூவருமே வெளிநாடுகளில் குடியேறிவிட்டனர்.
வயதான காலத்தில் தங்களைக் கவனிக்க ஆட்கள் இல்லாத சூழலில், ராஜசேகரன் - அமல் ராஜசேகரன் தம்பதியினர் சென்னை நீலாங்கரையில் உள்ள 'மதர் ஜோசஃபின் வன்னினி' முதியோர் இல்லத்தில் தங்கி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அமல் ராஜசேகரன் இன்று உயிரிழந்தார்.
பெரியம்மாவின் மறைவுச் செய்தியை அறிந்ததும், முதலமைச்சர் விஜய் உடனடியாக நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று அமல் ராஜசேகரனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சிறுவயதில் தங்களுக்கு அளவில்லா அன்பைக் கொடுத்த பெரியம்மாவின் உடலைப் பார்த்து முதலமைச்சர் விஜய் கலங்கினார்.
அண்ணியின் மறைவுச் செய்தி அறிந்து இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் முதியோர் இல்லத்திற்குச் சென்று, இறுதிச்சடங்கு மற்றும் காரியங்களுக்கான ஏற்பாடுகளை நேரில் நின்று கவனித்து வருகின்றனர். மேலும், அமல் ராஜசேகரனின் உடலுக்குத் த.வெ.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

