மதுரை, அக்டோபர் 30: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-ஆவது ஜெயந்தி மற்றும் 64-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்குத் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ் மற்றும் மதன்றாஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது: "தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. தேனி சிறையில் கதவுகள் பூட்டப்படும் நடைமுறையில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். தேனி சிறைக் கண்காணிப்பாளருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்று விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிறைகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்வதற்கு கடந்த பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்கியிருந்தோம். விரைவில் அனைத்துக் குறைபாடுகளும் கண்டறியப்பட்டு முழுமையாகச் சரிசெய்யப்படும்.
மின்சாரத் துறைக்குள் இருக்கும் சில நபர்கள் வேண்டுமென்றே, முக்கியப் புள்ளிகள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர். இது குறித்துப் பொறுப்பில் இருக்கும் நான் அதிகமாகப் பேச முடியாது. நீண்டகாலமாக இவற்றைச் சரிசெய்ய முயற்சி செய்து வருகிறோம்.
அதிக விலைக்கு மின்சாரம் இன்னும் கொள்முதல் செய்யப்படவில்லை; அதற்கான டெண்டர் தான் விடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மீண்டும் டெண்டர் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்மவர்கள் சிலர் கேட் அமைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மின் தட்டுப்பாடு என்பது இந்தியா முழுவதும் உள்ளது; அதிகக் கட்டணம் வசூலிக்கும் மாநிலங்களிலும் மின்வெட்டு உள்ளது" எனத் தெரிவித்தார்.

