தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், அவசரகால துப்புரவுப் பணி பொறுப்பு ஆணையம் (Emergency Response Sanitation Authority - ERSA) குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகர நல அலுவலர் (CHO) அனைவரையும் வரவேற்று, ERSA அமைப்பின் முக்கியப் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவாக விளக்கினார். இதில் தனியார் செப்டிக் டேங்க் வாகன உரிமையாளர்கள், பாதாள சாக்கடை பராமரிப்பு ஒப்பந்தப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையர்: "தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, துப்புரவுப் பணிகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுத்து 'பூஜ்ய உயிரிழப்பு' என்ற நிலையை உருவாக்க ERSA அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் எந்தவொரு செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடைக்குள்ளும் மனிதர்கள் நேரடியாக இறங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

தனியார் கழிவுநீர் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்கப்பட்டு, ஜி.பி.எஸ் (GPS) மூலம் கண்காணிக்கப்படும். மேலும், அவசரகாலத் தேவைகளுக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை செயல்படும்."

தவிர்க்க முடியாத விதிவிலக்கான சூழலில் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், முழு உடல் பாதுகாப்பு உடை (PPE Kit), முகக்கவசம், கையுறை மற்றும் நச்சு வாயுவைக் கண்டறியும் 'கேஸ் டிடெக்டர்' கருவி மூலம் ஆய்வு செய்த பிறகே பணிகளைத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பாரம்பரியமாக இப்பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, 'கழிவுநீர் சுத்திகரிப்பு வல்லுநர்களாக' மாற்றப்படுவார்கள் என்றும், நமஸ்தே (NAMASTE) திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் காப்பீடு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விதிகளுக்குப் புறம்பாகச் செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடைக்குள் மனிதர்களை இறக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடுமையாக எச்சரிக்கப்பட்டது.