க்கள் தீர்ப்பைப் புறக்கணித்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்கள் போட்டியிடத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயே, மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடும் போது, தேர்தல் செலவை வைப்புத் தொகையாக (Deposit) செலுத்தும் வகையில் புதிய நடைமுறையை வகுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிச் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

மனுவில், இவ்வழக்கு முடியும் வரை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அத்தொகுதிகளின் த.வெ.க. வேட்பாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல், சத்தியபாமா ஆகியோரின் வேட்புமனுக்களை ஏற்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் தெரிவித்ததாவது: "எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக முழு உரிமை உள்ளது. இருப்பினும், மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த நிலையில், உரிய காரணங்கள் ஏதுமின்றி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது மக்களை அவமதிக்கும் செயலாகும்; இது ஒரு கேலிக்கூத்தானது.

இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் என்ன விதிமுறைகள் உள்ளன? மக்களின் உரிமையைத் தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும். எனினும், ஏற்கனவே தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டதால் இப்போதைய சூழலில் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க முடியாது" எனத் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், "தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கூட இடைத்தேர்தலில் போட்டியிட முடியும்" எனச் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்குத் திருப்பி அனுப்பிய நீதிபதிகள், விசாரணையை வரும் செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.