தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூர் மேலத் தெருவைச் சேர்ந்த குமாரசாமி மகன் பாலகிருஷ்ணன் (55). இவர் மூன்று சக்கர மின்சார வாகனம் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முட்டை வியாபாரம் செய்து வந்தார். வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் கடலையூரிலிருந்து தனது சொந்த ஊரான கருப்பூருக்கு மின்சார வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
கருப்பூர் ஊருக்கு முன்பாக வந்தபோது, மின்சார வாகனத்தில் சார்ஜ் முழுவதுமாகத் தீர்ந்து போனது. இதனால் வாகனத்தை இறங்கித் தள்ளிக்கொண்டு பாலகிருஷ்ணன் நடந்து சென்றுள்ளார். கருப்பூர் ஓடைப் பாலத்தில் அவர் வாகனத்தைத் தள்ளிச் சென்றபோது, வாகனத்தின் அதிக எடை காரணமாக நிலைதடுமாறி வாகனத்துடன் ஓடைக்குள் கவிழ்ந்து விழுந்தார்.
இதில் ஓடைக்குள் விழுந்த பாலகிருஷ்ணன் மீது அந்த மூன்று சக்கர வாகனமும் விழுந்தது. ஓடையில் தண்ணீர் தேங்கியிருந்ததால், வாகனத்தின் அடியில் சிக்கி வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கிய பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாலகிருஷ்ணனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

