தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து விரிவான அறிக்கையை அளித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தீபாவளி நாளில் மட்டும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 17 கொலைகள் நடந்ததாகவும், அதன்பிறகும் சில கொலைகள் மற்றும் சிறைகளிலிருந்து கைதிகள் தப்பித்த சம்பவங்களும் அரங்கேறியதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும், மாவட்ட பெண் ஆட்சியர் ஒருவருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. ஒருவர் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்பட்டதும், மனு கொடுக்க வந்தவரைத் துணை சபாநாயகர் தாக்கியதாகக் கூறப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவங்களைக் கண்டித்த எதிர்க்கட்சியினர், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டினர். இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டதாகத் தகவல் வெளியானது. அதன்படி, இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் அர்லேக்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து அறிக்கை அளித்ததுடன், தமிழக நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தார்.

இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேக்கர் இன்று காஷ்மீருக்குச் செல்கிறார். நாளை (நவ. 14) அங்கு நடைபெறும் பல்கலைக்கழக விழாவில் கலந்துகொள்ளும் அவர், அதன்பிறகு 15-ஆம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.