தூத்துக்குடி திரேஸ்புரம் சங்கு மால் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் - பாஸ்டினா தம்பதியரின் 11 மாதக் குழந்தை மகிழன்.இந்நிலையில், தாய் பாஸ்டினா குழந்தையை அழைத்துக்கொண்டு திரேஸ்புரம் தீர்த்தக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு வீட்டின் முன்புறம் குழந்தை மகிழன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக அருகில் இயங்கிக் கொண்டிருந்த நீர்ரேற்றும் மின் மோட்டாரைக் குழந்தை மகிழன் தொட்டுள்ளான். இதில் பாய்ந்த பலத்த மின்சாரம் தாக்கியதில் குழந்தை தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 11 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.