திருநெல்வேலி மண்டலத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தவணை தவறிய பயிர்க்கடன்களை வசூலிக்கக் கடன் தாரர்களை வற்புறுத்தவோ, வசூல் நடவடிக்கை எடுக்கவோ கூடாது என கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.மு.முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மண்டலக் கூட்டுறவுத் துறை சார்பில், அனைத்துக் கூட்டுறவு சார்பதிவாளர்கள், கள அலுவலர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இணையவழி (காணொலிக் காட்சி) மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குத் திருநெல்வேலி மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.மு.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் திருநெல்வேலி மற்றும் சேரன்மாதேவி சரகத் துணைப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட முக்கிய அறிவுரைகள்:
மறு உத்தரவு வரும் வரை, தவணை தவறிய பயிர்க்கடன் நிலுவையில் உள்ள கடன் தாரர்களை உடனடியாக அத்தொகையைச் செலுத்துமாறு வற்புறுத்தவோ அல்லது திரும்பச் செலுத்தக் கோரி வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது.
புதிய உறுப்பினர்களுக்குப் பயிர்க்கடன் வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.100 சதவீதம் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கும் மீண்டும் பயிர்க்கடன் வழங்குவதற்கு உரிய கவனம் செலுத்த வேண்டும். கூட்டுறவுத் துறையின் இந்த அதிரடி அறிவிப்பு திருநெல்வேலி மண்டலப் பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

