முதல்வர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகக் கருதிக்கொண்டு த.வெ.க.வினர் நடிகர் விஜய் சேதுபதியைக் கடுமையாக விமர்சித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், இது குறித்துப் பேசியதாவது: "தம்பி விஜய் சேதுபதி தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்தவொரு அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவும் இல்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து அவர் கூறிய கருத்தைத் தங்களின் தலைவரோடு தாங்களாகவே பொருத்திக்கொண்டு, அவரைக் கடுமையாக விமர்சிப்பதும் இழிவுபடுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேச வேண்டும் என நினைப்பது ஜனநாயகமாகாது. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்குரிய கருத்தால் பதில் அளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம். 'ஜனநாயகன்' என்று படம் எடுத்தால் மட்டும் போதாது; உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும்.
கேள்விகளுக்குப் பதிலால் மட்டுமே எதிர்வினையாற்ற வேண்டும். அதை விடுத்து வசையாலும் மிரட்டலாலும் மற்றவர்களின் கருத்துரிமையை முடக்கக் கூடாது." இவ்வாறு சீமான் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

