திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்குத் தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பெருமளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், தச்சநல்லூர், கரிசல்குளம், பிராஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களில் சிலர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சாதி ரீதியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே கடந்த சில நாட்களாகக் கடும் முன்விரோதம் நிலவி வந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (செப்டம்பர் 19) புதிய பேருந்து நிலையத்தில் திரண்ட மாணவர்களிடையே இந்த முன்விரோதம் காரணமாக திடீரென காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி, மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டனர்.பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பகிரங்கமாக மோதிக்கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக திருநெல்வேலி சந்திப்புப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை நாலாபுறமும் வளைத்துப் பிடித்து மடக்கிப் பிடித்தனர். இதில் சிலர் தப்பிய நிலையில், 10-க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
பிடிபட்ட அனைவரும் 16 முதல் 17 வயதுடைய பள்ளிச் சிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இச் சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் அசம்பாவித திட்டங்கள் உள்ளதா, மோதலுக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் யார் என்பது குறித்துத் திருநெல்வேலி சந்திப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

