தென்காசி, கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட மொத்தம் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா தென்காசி மாவட்ட ஆட்சியராகவும், கரூர் ஆட்சியர் சி. முத்துக்குமரன் திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகத் தலைமைச் செயலர் எம். சாய்குமார் நேற்று இரவு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த மோனிகா ராணா இடமாற்றம் செய்யப்பட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சி. முத்துக்குமரன் மாற்றப்பட்டு, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநரின் துணைச் செயலராகப் பணியாற்றி வந்த எஸ். பிரசன்னா ராமசாமி இடமாற்றம் செய்யப்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சமூக நலத்துறை கூடுதல் செயலர்: சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (சிஎம்டிஏ) தலைமைச் செயல் அலுவலர் எஸ்.பி. கார்த்திகா மாற்றப்பட்டு, சமூக நலத் துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் உள்பட மொத்தம் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து நிர்வாக ரீதியிலான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.