ஆந்திர மாநிலம் வழியாகக் கரையை கடந்த ‘அர்னாப்’ புயல் காரணமாக, இன்று தூத்துக்குடி வந்து சேர வேண்டிய நரசப்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் ஆந்திர மாநிலத்தில் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்ததைத் தொடர்ந்து, ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் புயல் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தும், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும் உள்ளன. இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், நரசப்பூரில் இருந்து பீமாவரம், அகிவீடு, கைகாலூர், குடிவாடா சந்திப்பு, விஜயவாடா, தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், நெல்லூர், நாயுடுபேட்டை, சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் வழியாகத் தூத்துக்குடி வந்தடையும் வகையில் நரசப்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06020) இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்குத் தூத்துக்குடிக்கு வந்து சேர வேண்டிய இந்தச் சிறப்பு ரயில், ‘அர்னாப்’ புயல் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, தூத்துக்குடியில் கடந்த 26-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்ற தூத்துக்குடி - நரசப்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06019) ‘அர்னாப்’ புயல் முன்னெச்சரிக்கை காரணமாகப் பீமாவரம் டவுன் ரயில் நிலையத்திலேயே பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

