தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதைக் கண்டித்து, தூத்துக்குடியில் அக்டோபர் 31-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான பி. கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி. கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் (V.V.D. சிக்னல்) 31.10.2026, சனிக்கிழமை காலை 10:00 மணி அளவில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நடைபெறும் இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெசி பொன் ராணி தலைமை தாங்குகிறார்.

கவிதா கந்தகுமார், ராமலட்சுமி சங்கர் (வடக்கு மாவட்ட திமுக மகளிர் & மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள்) சாரதா பொன் இசக்கி, தயாநிதி வீரபாண்டியன் (தெற்கு மாவட்ட திமுக மகளிர் & மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள்)ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தவெக ஆட்சியில் தொடர்ந்து நிலவிவரும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குழந்தைகள் கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தத் தவறியதையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதைக் கண்டித்தும் தலைமைக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டக் கழக, கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்துச் சார்பு அணிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் பெருவாரியாகக் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும், தாங்கள் சார்ந்த பகுதிகளைச் சேர்ந்த கழக மகளிர் அணியினரையும், மகளிர் தொண்டர அணியினரையும் பெருந்திரளாக அழைத்து வந்து இப்போராட்டத்தைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.