திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி, தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் முன்பு இன்று (நவம்பர் 25) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அவமதித்ததைக் கண்டித்தும், நீதிமன்றத்தின் மாண்பை மதிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நீதிமன்ற உத்தரவுகளை மதித்துச் செயல்பட வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழக அரசு இவ்வாறு செயல்படுவது ஜனநாயகத்திற்கும் நீதித்துறையின் மாண்புக்கும் எதிரானது என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவுகளை அரசியல் காரணங்களுக்காகப் புறக்கணிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்துச் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் நீதிபாண்டியன், வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் சுரேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், அரசு தொடர்புப் பிரிவு மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் சுரேஷ், வடக்கு மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, வடக்கு மாவட்ட நகரத் தலைவர் சக்திவேல், மத்திய அரசு வழக்கறிஞர் பிரிவு மணிகண்ட நாகராஜன், மண்டலத் தலைவர் சண்முகநாதன், நாகராஜன், கலைச்செல்வி, காந்தி, உஷா, ஏ.பி.யு.எஸ். தலைவர் மகேந்திரன், மாவட்ட நீதிமன்றச் செயலாளர் செந்தட்டி, மாவட்டத் துணைத் தலைவர் காளிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

