தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் வாழை, வெண்டை, கொத்தமல்லி, சின்ன வெங்காயம் மற்றும் சிகப்பு மிளகாய் ஆகிய தோட்டக்கலைப் பயிர்களுக்குக் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்கள் கடைபிடிக்கவும், ஊக்குவிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகள் வாழை பயிருக்கு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.4525 கடைசி தேதி 01.03.2027, வெண்டை பயிருக்கு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.895 கடைசி தேதி 15.02.2027, கொத்தமல்லி பயிருக்கு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.595 கடைசி தேதி 18.01.2027, சின்ன வெங்காயப் பயிருக்கு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.1610 கடைசி தேதி 01.02.2027 மற்றும் சிகப்பு மிளகாய் பயிருக்கு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.1135 கடைசி தேதி 01.02.2027 அரசினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட தேதிக்குள் பயன்பெற வேண்டும் எனவும் தகுதியான விவசாயிகளுக்கு மகசூல் இழப்பீட்டின் அடிப்படையில் காப்பீட்டு இழப்பீடுத் தொகை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் மூலம் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தில் பதிவு செய்யும் போது விவசாயியின் பெயர், வங்கி கணக்கு எண், சாகுபடி செய்த கிராமத்தின் பெயர், சாகுபடி செய்த பயிரின் பரப்பு, புல எண் மற்றும் முழு முகவரி ஆகிய விவரங்களை சரிபார்த்த பின்பு பொது இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாவட்ட கண்காணிப்புக் குழு அறிவுறுத்தலின்படி, பொது இ-சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்ய வரும் விவசாயிகள் அடங்கல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற முத்திரையிடுதலினை பொது இ-சேவை மையங்கள் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதன் மூலம் ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்ட அடங்கல் பதிவுகள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படாத வகையில் பாதுகாக்கப்பட்டு பயனாளிக்கு இழப்பீட்டுத் தொகை விரைந்து கிடைக்க பொது இ-சேவை மையங்களும் பங்களிப்பு நல்கி இத்திட்டத்தினை விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

