உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21-ஆம் தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், விழாவின் உச்ச நிகழ்வான மகாதீப தரிசன விழா நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நேற்று மாலை அண்ணாமலையார் கோயிலில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் தங்க விமானங்களில் எழுந்தருளினர். தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி எழுந்தருள, கோயில் தங்கக் கொடிமரம் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு லட்சக்கணக்கான சிவபக்தர்களின் முழக்கத்திற்கிடையே 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டவுடன் திருவண்ணாமலை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்ததால், லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் வந்தனர்.

தீப தரிசன நாளிலிருந்து 11 நாட்களுக்கு, அதாவது அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ஆம் தேதி வரை அண்ணாமலையார் மலை உச்சியில் ஜோதிப் பிழம்பாகப் பக்தர்களுக்குக் காட்சி தருவார். அதன்பின்னர் மலை உச்சியிலிருந்து மகாதீபக் கொப்பரை கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டுச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆருத்ரா தரிசன நாளில் மகாதீப மை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

மேலும், இன்று (நவம்பர் 25) முதல் 3 நாட்களுக்கு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. நாளை (நவம்பர் 26) அதிகாலை சுவாமி, அம்பாள் கிரிவலம் வருவார்கள்; வரும் 28-ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.