தூத்துக்குடி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்கள் தொடர்பான மாவட்ட அளவிலான மாபெரும் சிறப்பு தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் வரும் 28.10.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரைத்தளத்தில் அமைந்துள்ள சங்கு கூடத்தில் நடைபெற உள்ளது.

இச்சிறப்பு தொழிற்கடன் முகாமில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ் வியாபார நிறுவனங்களுக்கு 25 % மானியமும், புதியதாக தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கு 25% மானியமும்,

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் (AABCS) கீழ் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மட்டும்) உற்பத்தி, சேவை மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு 35% மானியமும், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் (TWEES) கீழ் (மகளிருக்கு மட்டும்) உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த நிறுவனங்களுக்கு 25 % மானியமும்,

கைவினைத் தொழில்கள் தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு கலைஞர் கைவினைத் திட்டத்தின் (KKT) கீழ் 25% மானியமும், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் (PMFME) கீழ் உணவு பொருள் சார்ந்த உற்பத்தி நிறுனங்களுக்கு 35 % மானியமும், கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வங்கி கடன் பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்களான ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி புத்தக நகல், குடும்ப அட்டை நகல், மாற்று சான்று (TC), விலைப்புள்ளி பட்டியல் (Quotation) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றை 28.10.2026 அன்று நடைபெற உள்ள சிறப்பு தொழிற்கடன் வசதியாக்கல் முகாமில் கலந்து கொள்வதற்காக எடுத்து வர வேண்டும்.

இச்சிறப்பு தொழிற்கடன் வசதியாக்கல் முகாமில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கியாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே புதியதாக தொழில் தொடங்க அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் கொண்டு வரும் பட்சத்தில் தகுதியுள்ளவர்களுக்கு வங்கியாளர்களால் அன்றே கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0461-2340152 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, இச்சிறப்பு முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.