தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதாந்திர மாவட்ட பள்ளிக்கல்வி செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களைச் சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, மீன்வளத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை மற்றும் சமூகநலத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இடைநிற்றல் வாய்ப்புள்ள மாணவர்களின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு டெங்கு உள்ளிட்ட தொற்றாநோய்களைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். பள்ளிகள் மற்றும் விடுதிகளின் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைக் குளோரினேஷன் செய்யவும், மாணவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகவும் கேட்டுக்கொண்டார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டச் சமையலறைகளைச் சிறப்பாகப் பராமரிப்பதுடன், உணவுப் பொருட்களைத் தரையில் வைக்காமல் பலகைகளின் மேல் வைத்துப் பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2024-25-ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வு தேர்ச்சி மற்றும் தனித்திறன்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழுடன் தலா ரூ.10,000-க்கான காசோலையையும், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழுடன் தலா ரூ.20,000-க்கான காசோலையையும் ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெபா, மாவட்ட கல்வி அலுவலர்கள் முனியசாமி, முருகேசன், சீதா மகேஷ்வரி, செல்வி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.