தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் தேக்கம் குறித்த புகார்களுக்கு மாநகராட்சியின் கட்டணமில்லா கட்டுப்பாட்டு அறை எண் 1800 203 0401 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தாழ்வான மற்றும் சில குறிப்பிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோரின் உத்தரவின்பேரில், 4 மண்டலங்களிலும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுப் போர்க்கால அடிப்படையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சியின் முக்கிய சாலைகளான டபிள்யூ.ஜி.சி. சாலை, பீச் ரோடு மற்றும் குடியிருப்பு பகுதிகளான சாந்தி நகர், பொன்னாண்டி நகர் ஆகிய இடங்களில் தேங்கிய மழைநீர் அதிநவீன மோட்டார்கள் மற்றும் கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் மூலம் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் அகற்றப்பட்டு, நீர் சீராக வெளியேற வழிவகை செய்யப்பட்டது.
மழைநீர் தேங்கிய இடங்களில் கொசு உற்பத்தி மற்றும் தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு, கிருமிநாசினி பிளீச்சிங் பவுடர் தூவுதல் மற்றும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகள் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மூலம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் தங்கள் பகுதி குடியிருப்பு அல்லது சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாகத் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1800 203 0401 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

