தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் 41 - ஆவது தேசிய கண்தான இரு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் கண் தானம் செய்த குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பொன்னாடை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடங்களை வழங்கி கௌரவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், 41-ஆவது தேசிய கண்தான நிகழ்வில் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நிகழ்வு முழுவதும் கண்தான செய்த குடும்ப உறுப்பினர்களுக்கு கௌரவிக்கப்படும் நிகழ்வாகும். பொதுவாக, வாழ்க்கையில் நம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு தானமாக வழங்குவதற்கு நாம் யோசிப்போம்.

குறிப்பாக இங்கு வந்திருக்கின்ற குடும்ப உறுப்பினர்கள் கண்களை தானமாக கொடுத்தவர்கள், அவர்களின் கடைசி நேரத்திலும் கூட உலகத்தில் என்ன கொடுக்க முடியும் என்ற சிந்தனை அவர்களிடம் இருந்துருக்கும். அதே நேரத்தில் ஒருவருக்கு கண்தானம் மூலம் பார்வை கிடைக்கும் சந்தோஷம் வாழ்வில், குழந்தை பிறக்கும் பொழுது தாய்க்கு அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படும் சந்தோஷத்தை போன்றது.

தமிழ்நாடு அரசு கண்தானம், உடல் உறுப்பு தானம் போன்றவைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேப்போல் மாவட்ட நிர்வாகமும், மருத்துவ கல்லூரி நிர்வாகமும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆகவே, அனைவரும் கண்தானம் செய்ய முன்வருவீர் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.

முன்னதாக, கண்தான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர், கண்தானம் செய்த குடும்பத்தினர்களை மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து, கண்தான விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் கலைவாணி, மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், கண்ணியல் பிரிவு தலைவர் ரீட்டா ஹெப்சி ராணி, மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் கண்தானம் செய்த குடும்பத்தினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.