தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 33, மில்லர்புரம் பகுதியில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் மாநகராட்சி அலுவலர்கள் அப்பகுதியில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பாக உணவுப் பாதுகாப்புத் துறையில் முறையான அனுமதி பெறாமலும், குடியிருப்புப் பயன்பாட்டில் உள்ள இடத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி, மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் மூலம் உரிய அனுமதி பெறாமலும் குடிநீர் சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவின்பேரில் மேற்கு மண்டல உதவி ஆணையாளர் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் அந்தத் தனியார் நிறுவனத்திற்குப் பூட்டி சீல் வைத்தனர்.

மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் இதுபோன்று அனுமதியின்றிச் சட்டத்திற்குப் புறம்பாக நிலத்தடி நீரை உறிஞ்சி வணிகப் பயன்பாட்டில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் கண்டறியப்பட்டால், அவை மீது கடும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.