திருச்செந்தூர் அருகே உள்ள வள்ளிவிளையில் கோவை பயணியர் பெர்டிலைசர் நிறுவனமும், திருச்செந்தூர் கலசம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கான உரப் பயன்பாடு பயிற்சி முகாமை நடத்தின.

முகாமுக்கு பயணியர் பெர்டிலைசர் நிறுவனப் பொதுமேலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில விற்பனை மேலாளர் பரமசிவம், மண்டல விற்பனை மேலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கதிர் உர நிறுவன நிர்வாகி ராஜேந்திரன், பயிர்களுக்கு எந்தெந்தப் பருவங்களில் என்னென்ன உரங்கள் இட வேண்டும் என்பது குறித்தும், உரங்களை முறையாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் உர மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினார். மேலும், உர விற்பனையில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு, எதிர்காலத்தில் உரங்களை வாங்கும் முறை மற்றும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவது குறித்தும் அவர் பயிற்சி அளித்தார்.

இம்முகாமில் திருச்செந்தூர் கலசம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்கள் ஜெயசேகரன், பீட்டர், ரவீந்திரன், தங்கரதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். நிறைவாக, கலசம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் அம்பிகாபதி நன்றி கூறினார்.