தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம் ஸ்பிக் நுகர்வோர் கூட்டுறவு பண்டகச் சாலையில் கூட்டுறவுத் துறை சார்பில் 10 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ரூ.200 மதிப்பிலான தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் டி.சி. 26 ஸ்பிக் நுகர்வோர் கூட்டுறவு பண்டகச் சாலையில் இன்று (30.10.2026), கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ஊரகப் பகுதிகளில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் தீபாவளி சிறப்பு மளிகைத் தொகுப்பு ரூ.200-க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாநிலம் முழுவதும் 128 ஊரகப் பகுதிகளில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு ரூ.200-க்கு வழங்கும் திட்டத்தைக் கூட்டுறவுத் துறை அமைச்சர் திருவள்ளூர், செங்குன்றம் கூட்டுறவு விற்பனை அங்காடியில் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம் டி.சி. 26 ஸ்பிக் நுகர்வோர் கூட்டுறவு பண்டகச் சாலையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மளிகைத் தொகுப்பில் இதில் கடலைப்பருப்பு-250 கிராம், பாசிப்பருப்பு - 250 கிராம், மிளகாய் - 100 கிராம், தனியா -150 கிராம், பூண்டு - 150 கிராம், புளி -250 கிராம், கடுகு-100 கிராம், உடைத்த உளுத்தம் பருப்பு - 100 கிராம், சீரகம் - 50 கிராம், சோம்பு - 50 கிராம் போன்ற 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பினை ரூ.200/- வழங்கப்படுகிறது. இத்தொகுப்பினை பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இரா. ராஜேஷ், பொது விநியோகத் திட்டத் துணைப்பதிவாளர் அ. சுப்புராஜ், பண்டகச்சாலையின் செயலாட்சியர் வெ. பாலமுருகன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.