விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள இரண்டாம் கேட் அருள்மிகு வரத விநாயகர் திருக்கோவில், சிதம்பர நகர் விநாயகர் கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
சிவன் கோவில் தபசு மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விஸ்வரூப விநாயகர் சிலைக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாநகரப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 42 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி பகுதியில் 12 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 37 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
காசுக் கடை பஜார் பகுதியில் 9 அடி உயரம் கொண்ட முத்து வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது போல் தூத்துக்குடி மாநகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களில் சுமார் 100 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளளன.

இந்த சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாகக் எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. விநாயகர் சிலை ஊர்வலம் சிவன் கோவில் தபசு மண்டபத்தில் தொடங்கி 1-வது கேட், மட்டக்கடை மற்றும் திரேஸ்புரம் வழியாகச் சென்று தூத்துக்குடி சங்குமுகம் கடற்கரையைச் சென்றடையும். அங்குச் சிலைகள் அனைத்தும் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்படவுள்ளன. விழாவை முன்னிட்டு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

