தூத்துக்குடியின் முக்கிய சாலையான வி.இ. ரோடில் இருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் கழிவுகளும் குப்பைகளும் கொட்டப்பட்டுச் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சங்கராபுரம் செல்லும் பிரதான பாதையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெட்டப்பட்ட மரங்கள் மற்றும் தனியார் ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்கள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே குறுகிய சாலையான இந்தப் பகுதியில், ஆக்கிரமிப்புகளும் குப்பைக்கழிவுகளும் சேர்ந்து பாதையை அடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சாலையின் அருகிலேயே சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹோலி க்ராஸ் ஹோம் சயின்ஸ் பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மாணவிகளும் பெற்றோர்களும் சென்று வரும் இந்தச் சாலையில், பாதையையே அடைக்கும் அளவிற்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசலும் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
குறுகிய சாலையில் ஏற்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எவ்வித இடையூறின்றிச் சென்று வர தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

