தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (46). கட்டடத் தொழிலாளியான இவரது மகன் கருப்பசாமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கரண் (23) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கரண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் சுடலைமுத்துவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு சுடலைமுத்துவிடம் அவதூறாகப் பேசி, கையால் தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைக் கொடூரமாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த சுடலைமுத்து மீட்டெடுக்கப்பட்டுச் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இத்தாக்குதலில் ஈடுபட்ட கரண் (23), 17 வயதுச் சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் கண்ணன் (26) மற்றும் முனியசாமி மகன் சிவசூர்யா (23) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.