டிஎம்பி அறக்கட்டளை, பெண்களின் ஆரோக்கிய மேம்பாடு மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு பல்வேறு மருத்துவ முகாம்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 2026 செப்டம்பர் 3 அன்று, டிஎம்பி அறக்கட்டளை மற்றும் நர்மதா மருத்துவமனை இணைந்து இந்த ஹெச்பிவி தடுப்பூசி முகாமை நடத்தின.

இம்முகாமின் மூலம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1,200 கல்லூரி மாணவிகளுக்குப் புற்றுநோய் தடுப்பு ஹெச்பிவி (HPV) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இம்முகாமை டிஎம்பி அறக்கட்டளையின் இயக்கத் தலைவர் அனந்த சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "கிராமப்புற மாணவிகளுக்குத் தரமான மருத்துவ மற்றும் சுகாதார சேவைகளை வழங்க டிஎம்பி அறக்கட்டளை தொடர்ந்து முனைப்புடன் பங்களிக்கும்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் டிஎம்பி அறக்கட்டளையின் துணைத் தலைவர் டி. இன்பமணி, சிவகாசி இந்திய மருத்துவச் சங்க கிளைத் தலைவர் ரஸ்மி பிரவீன், நர்மதா மருத்துவமனையின் மகப்பேறு நிபுணர் ஜெ. நர்மதா பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.