தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் அமைந்துள்ள உணவுப் பாதுகாப்புத் துறை குடோன் வளாகத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் பழைய கோப்புகள் மற்றும் சாக்கு மூட்டைகள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் இந்திய உணவுப் பாதுகாப்புக் கழகக் கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிட வளாகத்தில் உள்ள அறையொன்றில் பழைய கோப்புகள் மற்றும் பயன்பாட்டிலில்லாத பழஞ்சாக்கு மூட்டைகள் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று காலை அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் மாற்றியில் எதிர்பாராதவிதமாகத் திடீரென பயங்கரச் சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, அருகில் இருந்த கோப்புகள் மற்றும் சாக்கு மூட்டைகளில் தீப்பற்றிக் கொண்டது.

தீ மளமளவெனப் பற்றி எரிவதைக் கண்ட ஊழியர்கள், உடனடியாக இதுகுறித்து மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலருக்கு அவசரத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தூத்துக்குடி மற்றும் சிப்காட் பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.

அதற்குள் அறை முழுவதும் தீ பரவி பழைய கோப்புகளும் சாக்கு மூட்டைகளும் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் உடனடியாகப் போராடி தீ மேற்கொண்டு பரவாமல் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்துச் சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.