போலீஸ், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அச்சுறுத்திப் பணம் பறிக்கும் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு 'தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி' தனது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வங்கியின் மோசடி இடர் மேலாண்மைப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சைபர் குற்றவாளிகள் தங்களை காவல்துறை, சிபிஐ (CBI), அமலாக்கத்துறை (ED), சுங்கத்துறை (Customs) அல்லது ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரிகளாகப் போலியாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.
வாடிக்கையாளர்களின் அடையாள எண்கள், அலைபேசி எண் அல்லது வங்கிக் கணக்குகள் குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிப் பொய் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். வாட்ஸ்அப் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்புகொண்டு, 'டிஜிட்டல் கைது' செய்வதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டுகின்றனர்.
'பாதுகாப்புக் கணக்கு' அல்லது 'சரிபார்ப்புக் கணக்கு' என்று கூறி, பணத்தை உடனடியாகப் பரிமாற்றம் செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து வீடியோ அழைப்பிலேயே வைத்திருந்து பயமுறுத்துவதுடன், OTP, MPIN, ATM PIN, CVV மற்றும் கடவுச்சொற்களைப் பெற முயல்கின்றனர்.
வங்கி நிர்வாகத்தின் முக்கிய அறிவுறுத்தல்கள்:
'டிஜிட்டல் கைது' என்பது சட்டப்பூர்வமான நடைமுறையே அல்ல. இந்தியச் சட்டத்தில் அப்படி ஒரு கைது முறை கிடையாது.
அரசு அதிகாரிகளோ அல்லது வங்கிப் பணியாளர்களோ தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் பணம் அனுப்புமாறோ, வங்கியின் ரகசிய விவரங்களைப் பகிருமாறோ ஒருபோதும் கேட்க மாட்டார்கள்.
OTP, MPIN, ATM PIN, CVV, கடவுச்சொல் மற்றும் இணைய/மொபைல் வங்கித் தகவல்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்.
முன்பின் தெரியாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது போன் திரையைப் பகிரவோ (Screen Share) வேண்டாம்.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால், உடனடியாக இணைப்பைத் துண்டித்துவிட்டுக் சைபர் கிரைம் போலீசாரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட வங்கியிலோ புகார் அளிக்கவும்.
வாடிக்கையாளர்கள் அனைவரும் இத்தகைய போலி அழைப்புகள் குறித்து விழிப்புடன் இருந்து, தங்களது பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு TMB வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

