திருநெல்வேலி மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் உள்ள தூத்துக்குடி சாலையில் இயங்கி வரும் அசைவ உணவகம் ஒன்றில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுச் சலுகை விலையில் பிரியாணி வழங்கப்படுவதாக விளம்பரப் பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது.
இப்படமானது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உணவகத்தின் முன்பாகத் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகரக் காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திச் சர்ச்சைக்குரிய விளம்பரப் பதாகையை உடனடியாக அகற்றினர். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இந்துக்களின் கடவுளை அவமதிக்கும் வகையிலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் இந்தப் பதாகை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நரசிங்கநல்லூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அசைவ உணவகத்தின் உரிமையாளரான கே.டி.சி நகரைச் சேர்ந்த முருகையா என்பவரின் மகன் ஜெயந்த் (30) என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

