தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் வழியாக அதிக அளவு கற்களை ஏற்றி விதிகளை மீறி லாரிகள் இயக்கப்பட்டு வருவதால், அப்பகுதி சாலைகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, வீரப்பட்டியிலிருந்து முத்துலாபுரம் செல்லும் 5 கிலோமீட்டர் தூரச் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற வகையில் உருக்குலைந்து கிடக்கிறது.
எனவே, அளவுக்கு அதிகமாகவும் விதிகளை மீறியும் கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரப்பட்டி கிராம மக்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில், நேற்று மாலையில் அவர் வீரப்பட்டி கிராமத்திற்குப் பொதுமக்களுடன் நேரில் சென்றார்.
ஆவணங்கள் இல்லாத 6 லாரிகள் உட்பட 10 லாரிகள் சிறைபிடிப்பு:
அப்போது வீரப்பட்டி வழியாகக் கற்களை ஏற்றி வந்த லாரிகளைத் தடுத்து நிறுத்திய எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், அனுமதிச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை ஓட்டுநர்களிடம் சரிபார்த்தார். இதில் 6 லாரிகளில் எவ்வித அனுமதிச் சீட்டும் இல்லாமல் கற்களை ஏற்றி வந்ததும், மற்ற 4 லாரிகளில் அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த 10 லாரிகளையும் எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் தலைமையில் கிராம மக்கள் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சிறைபிடிக்கப்பட்ட லாரிகள் அனைத்தும் மேல் நடவடிக்கைக்காக எட்டயபுரம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டன.

