தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை புதூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக, கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் நிர்வாகம் சார்பில் சுமார் 1.60 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. ஆனால், அந்தச் சுடுகாட்டிற்குச் செல்ல முறையான பொதுப் பாதை இல்லாததால், தனிநபர்களின் நிலங்கள் வழியாக உடல்களைத் தூக்கிச் செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
குறிப்பாக, ஊரிலிருந்து சுடுகாட்டிற்குச் செல்ல வெறும் ஒரு அடி அகலப்பாதை மட்டுமே உள்ளதால், உடல்களை அடக்கம் செய்யக் கொண்டு செல்லும்போது அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், நேற்று (திங்கள்கிழமை) அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், சுடுகாட்டிற்குச் செல்லச் சரியான பாதை அமைத்துத் தரக் கோரி அவரது உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்களும் ஊர் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தனிநபர்களின் நிலங்களில் சுடுகாட்டுப் பாதைக்கான இடத்தை முறைப்படி வாங்கித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யச் சம்மதித்தனர்.

