நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல் சலாம். இவரது மகன் ரஹீம் (15) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஹீம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். இதில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஹீமுக்கு எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், வலது கால் முட்டிப் பகுதியில் ஜவ்வு விலகியிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்தக் காலில் மாவுக்கட்டுப் போடப்பட்டு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, நேற்று (திங்கள்கிழமை) காலையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் ரஹீமை அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே அழைத்து வரப்பட்ட ரஹீமைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். காயமடைந்த வலது காலுக்குப் பதிலாக, நல்ல நிலையிலிருந்த இடது காலில் தவறுதலாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்திருப்பது தெரியவந்தது.

இதனால் பதற்றமடைந்த ரஹீமின் பெற்றோர் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் முறையிட்டபோது அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மருத்துவர்களின் அலட்சியத்தால் தங்களது மகனின் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கதறித் துடித்த பெற்றோர், தவறு செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட மருத்துவர்களே தங்களது மகனைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துத் தரமான மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் செல்வராஜன் கூறியதாவது: "மாணவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாநில அளவிலான மருத்துவர்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24) நேரில் விசாரணை நடத்தி, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களிடம் விளக்கம் கேட்க உள்ளனர். அதன் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தெரியவரும்.

மாணவனின் பெற்றோர் நெல்லை அரசு மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் குழுவின் விசாரணை ஒருபுறம் நடந்தாலும், மாணவனின் இரண்டு கால்களையும் முழுமையாகச் சரிசெய்து, அவரைப் பழைய நிலையில் நடக்க வைப்பதற்கான அனைத்து சிகிச்சைகளையும் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.