செல்போன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியைக் கணினிகளுடன் இணைத்துப் பயன்படுத்த வாட்ஸ்அப்-வெப் தளம் பயன்படுகிறது. இதன் மூலம் செல்போனைப் பயன்படுத்தாமலேயே கம்ப்யூட்டர் திரை வழியாகத் தகவல்கள், படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கவும், பதிலளிக்கவும் முடியும்.
இவ்வாறு பொது கம்ப்யூட்டர்கள் மற்றும் தெரியாத கம்ப்யூட்டர்களில் வாட்ஸ்அப்பை இணைத்துப் பயன்படுத்திவிட்டு, அதைத் தகுந்த முறையில் 'லாக் அவுட்' செய்யாமல் கவனக்குறைவாக விட்டுவிட்டால், சைபர் குற்றவாளிகளின் கைவரிசைக்கு ஆளாக நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. அவர்கள் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கவும், தனிநபர் உரையாடல்களை அறிந்து பெரும் மோசடிகளை அரங்கேற்றவும் முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவான தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "சைபர் குற்றவாளிகள் அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ்அப்-வெப் கணக்குகளைப் பயன்படுத்தி, செய்திகளைப் படிக்கவும், கணக்கு வைத்திருப்பவரைப் போல் ஆள்மாறாட்டம் செய்து தகவல்களை அனுப்பவும், செல்போன் எண்கள் மற்றும் குழு உரையாடல்களை அணுகவும் முடியும். மேலும், பயனரின் நம்பகமான அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி மற்றும் சமூகப் பொறியியல் (Social Engineering) தாக்குதல்களை நடத்தவும் வாய்ப்புள்ளது.
எனவே, கம்ப்யூட்டர்களில் வாட்ஸ்அப்-வெப் பயன்படுத்தும்போது பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, அலுவலக கம்ப்யூட்டர்கள், பகிரப்பட்ட கம்ப்யூட்டர்கள், பொது கம்ப்யூட்டர்கள் மற்றும் பிறர் பயன்படுத்தும் கருவிகளில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அரசு, அமைப்பு சார்ந்த, நிதி சார்ந்த, ரகசியமான அல்லது முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை வாட்ஸ்அப்-வெப் மூலம் பரிமாறிக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. பொது இணைய மையங்கள், பொது இடங்கள், ஓட்டல், வணிக மையங்கள், இரவல் வாங்கிய கம்ப்யூட்டர்கள் அல்லது பிற நம்பகமற்ற கணினிகளில் வாட்ஸ்அப்-வெப் பயன்படுத்தக் கூடாது."
"வாட்ஸ்அப்-வெப் பயன்பாட்டை முடித்ததும், பயனர்கள் கம்ப்யூட்டரில் உள்ள உலாவியை (Browser) வெறுமனே அணைக்கவோ அல்லது அந்தக் குறிப்பிட்ட தளத்தை மூடவோ செய்தால் மட்டும் போதாது. மாறாக, ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் தகுந்த முறையில் இணைப்பைத் துண்டிப்பது (Log out) கட்டாயமாகும்.
உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் ஏற்படும் அசாதாரண செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் கணக்கிலிருந்து அனுப்பப்படும் எதிர்பாராத செய்திகள், தொடர்புகளிடமிருந்து வரும் வழக்கத்துக்கு மாறான பதில்கள் அல்லது விளக்க முடியாத செயல்பாடுகள் போன்றவற்றைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர்கள், இயக்க முறைமைகள் மற்றும் உலாவிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், மென்பொருள்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும், சந்தேகத்திற்கு இடமான பதிவிறக்கங்கள், அறியப்படாத கோப்புகள் மற்றும் திருட்டு மென்பொருள்களைத் தவிர்க்கவும் வேண்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

