திருநெல்வேலி பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா ஜெயகுமார் (59), தனியார் கல்லூரி உதவி பேராசிரியை. இருவரும் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்குத் தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளம் விலக்கு பகுதியில் உள்ள சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது, இருவரும் உணவருந்தச் சென்றனர். அப்போது பேருந்திற்குள் வைத்திருந்த சுமார் 40.08 பவுன் தங்க நகைகள் அடங்கிய கைப்பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் குறித்துக் கயத்தாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உணவகத்தில் இருந்த சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் கோபுர சிக்னல்களை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், கோவில்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளர் நீல் சர்மா ஆலோசனையின்படி, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானமாமலை தலைமையில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், தலைமை காவலர்கள் செல்லத்துரை, கார்த்திக், ராமச்சந்திரன் மற்றும் முதல் நிலை காவலர் சரவணகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் மத்தியப் பிரதேச மாநிலத்திற்குச் சென்று தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, திருட்டில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான மக்சூத் கான் (35) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட 40.08 பவுன் நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட மக்சூத் கானை தனிப்படை போலீசார் கோவில்பட்டிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளான ரபிக் (40) மற்றும் 'கடுக்கான்' என்ற முகதின் கான் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குற்றவாளியை விரைந்து கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரைக் கோவில்பட்டி ஏஎஸ்பி நீல் சர்மா பாராட்டினார்.

