"முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் முடிந்து தமிழகம் திரும்பியதும் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்று நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: "பொதுமக்கள் தமிழக சட்டமன்ற நடைமுறைகளை வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் பார்த்து வருகிறார்கள்.

சட்டமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். பைபிள் வசனங்கள், உறவினர்களைப் பற்றிப் பேசுவது சட்டமன்றத்திற்கு ஏற்புடையதா என்பதைப் பொதுமக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சர் விஜய் தற்போது லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சொந்த வேலையாகச் சென்றுள்ளாரா அல்லது யாருடன் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அரசு செலவில் அவருடன் யார் யாரெல்லாம் சென்றுள்ளார்கள் என்பதும் தெளிவில்லை. உண்மையிலேயே முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகத் தான் அவர் சென்றுள்ளாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

வெறும் 3 நாட்களில் எத்தனை முதலீட்டாளர்களைச் சந்திக்க முடியும் என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி. சொந்த வேலையாகச் சென்றிருந்தால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால், தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கத்தான் சென்றுள்ளார் என்றால், தமிழகம் திரும்பியதும் முதலீடுகள் குறித்து விரிவாக விளக்க வேண்டும். அவரது பயணம் தவறில்லை, ஆனால் வெளிப்படைத்தன்மை அவசியம்.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகளைத் தொழில்துறை அமைச்சர் தான் செய்ய வேண்டும். ஆனால் இப்போது முதலமைச்சரே நேரில் சென்றுள்ளார். அவர் லண்டனில் யாரைச் சந்திக்கப் போகிறார், என்ன செய்யப் போகிறார் என்பதைத் தமிழகம் திரும்பியவுடன் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்." இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.