தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் உப்பள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களைச் சந்தித்த பின்னர், விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: "தூத்துக்குடி பகுதியில் சுமார் 50 ஆயிரம் மக்கள் தலைமுறை தலைமுறையாக உப்பளத் தொழிலையே தங்களது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில் இந்தப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கக் கூடாது. மக்களின் முழுமையான ஒப்புதலைப் பெற்ற பின்னரே இது போன்ற திட்டங்கள் குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருப்பது அவர்களின் ஜனநாயக உரிமை. இருப்பினும், அந்த இரு தொகுதிகளிலும் கூட்டணிக் வேட்பாளர்களின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஒத்துழைக்கும்.

திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட சிலர் முதலமைச்சரைக் குறித்து பொதுமேடைகளில் ஒருமையில் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது தந்தை பெரியார் பாசறையில் வளர்ந்தவர்களின் பேச்சாகத் தெரியவில்லை. இதுபோன்ற எல்லை மீறிய நாகரிகமற்ற பேச்சுகள் திமுக மீதான நன்மதிப்பையே மக்கள் மத்தியில் சீர்குலைக்கும்." இவ்வாறு அவர் கூறினார்.