பெரியத்தாழை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சாத்தான்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வரையிலான புதிய பேருந்து வழித்தட நீட்டிப்புச் சேவையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் பெரியத்தாழை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் கு.சரவணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பேசியதாவது: வழித்தட எண் 62-G: காலை 7.25 மணிக்கு உடன்குடியில் புறப்பட்டு ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, படுக்கப்பத்து, பெரியத்தாழை, செட்டிவிளை, உசரத்துக்குடியிருப்பு, ஆரோக்கியமாதா நகர், கரட்டுக்கட்டுவிளை, காந்திநகர் வரை வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டு; அங்கிருந்து கொம்மடிக்கோட்டை, தட்டார்மடம், காமராஜ நல்லூர், பொத்தகாளன்விளை, முதலூர், முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் சாத்தான்குளம் பேருந்து நிலையம் வழியாக சாத்தான்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வரை இயங்கும்.
வழித்தட எண் 62-S1 (கூடுதல் நடைகள்): மதியம் 2.00 மணிக்கு சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் புறப்பட்டு விஜயராமபுரம், சிறப்பூர், காமராஜ நல்லூர், நடுவக்குறிச்சி, முத்தம்மாள்புரம், தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, சொக்கன்குடியிருப்பு, காந்தி நகர் வழியாக பெரியத்தாழை சென்றடையும். மாலை 3.20 (15.20) மணிக்கு பெரியத்தாழையில் புறப்பட்டு காந்தி நகர், தட்டார்மடம், நடுவக்குறிச்சி வழியாக மீண்டும் சாத்தான்குளம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வரை இயங்கும்.
வழித்தட எண் 60-A: காலை 7.30 மற்றும் மதியம் 2.50 மணிக்கு தென்திருப்பேரை வரை சென்று கொண்டிருந்த பேருந்து சேவை, தற்போது நாசரேத் வரை வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய பேருந்து வழித்தட நீட்டிப்புகள் மூலம் சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களும் பெரும் பயன்பெறுவார்கள் என்றும், இச்சேவையினை பொதுமக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அரசுப் போக்குவரத்துக்கழகத் திருநெல்வேலி (தூத்துக்குடி மண்டலம்) பொது மேலாளர் ராமகிருஷ்ணன், வணிகப் பிரிவின் துணை மேலாளர் சண்முகம், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

