நிஷின் கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணித் தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஜப்பான் அணி, 19.5 ஓவர்களில் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 'ஆல் அவுட்' ஆனது.

ஜப்பான் தரப்பில் தொடக்க வீராங்கனைகள் ஹருனா இவாசாகி 10 ரன்களும், அயகா கடோ-ஸ்டாபோர்ட் 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர்; இதில் 4 பேர் ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகினர்.

இந்திய அணி சார்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி, 4 ஓவர்களில் 2 மெய்டன் உட்பட 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேலும் ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகளையும், ஸ்ரேயங்கா மற்றும் தீப்தி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

58 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்கத்தில் குணாளன் கமாலினி (0), பார்த்தி ஃபூல்மாலி (6) ஆகியோர் ஆட்டமிழந்த போதிலும், அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 15 பந்துகளில் 40 ரன்களுடனும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ரிச்சா கோஷ் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

மற்ற கால் இறுதி ஆட்டங்களில் தாய்லாந்து அணியைப் பாகிஸ்தானும், மலேசியாவை இலங்கை அணியும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

• முதல் அரையிறுதி: இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

• இரண்டாவது அரையிறுதி: இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.