அரசுப் பேருந்தின் எல்.இ.டி. டிஸ்பிளேயில் திமுகவை விமர்சிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றது தொடர்பாக கண்டக்டர், டிரைவர் உள்பட 5 பேர் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து கடலூர், விருத்தாசலம், பெரம்பலூர் வழியாகத் திருச்சிக்கு தினசரி அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இப்பேருந்து விருத்தாசலத்தில் இருந்து திருச்சி நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. செல்லும் வழியில், அப்பேருந்தின் பின்பக்க எல்.இ.டி. பெயர் பலகையில் "ஓம் சக்தி பராசக்தி... தி.மு.க. ஒரு தீயசக்தி" என்பது உள்பட பல்வேறு தி.மு.க. மற்றும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் அவதூறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதை அப்பேருந்தின் பின்னால் வந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப்பார்த்த பொதுமக்களும், தி.மு.க.வினரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து கடலூர் அரசுப் போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், விருத்தாசலத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் வழித்தட எல்.இ.டி. பெயர் பலகையில் அவதூறு வாசகங்கள் பதிவிடப்பட்டது குறித்து அந்தப் பேருந்தின் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், பெயர் பலகைக்குச் செல்லக்கூடிய ஒயர் துண்டிக்கப்பட்டிருந்ததால், அதனைத் தவறாகப் பயன்படுத்தி யாரோ சிலர் அவதூறான வாசகங்களைப் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. பணிமனை ஊழியர்கள் யாரேனும் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், விழுப்புரம் போக்குவரத்துக்கழக பணிமனை இயக்குநர் உத்தரவின்படி, ஓட்டுநர்கள் சித்திரைச்செல்வன், பரந்தாமன் மற்றும் நடத்துநர்கள் செந்தாமரை கண்ணன், வெங்கடேசன், மணிகண்டன் ஆகிய 5 ஊழியர்கள் ஒரு வாரத்திற்குச் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

