இந்திய அஞ்சல் துறை சார்பில் மாணவர்களிடையே மறைந்து வரும் கடிதம் எழுதும் பழக்கத்தை மீளுருவாக்கம் செய்யவும், அவர்களின் படைப்பாற்றல், சிந்தனைத் திறன் மற்றும் மொழியாற்றலை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் 'தாய் அகர்' கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி வி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டுக்கான போட்டி நடைபெற்றது. இன்றைய போட்டியில் பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு, தங்களது கையெழுத்தால் தங்களது கருத்துக்களை ஆர்வமுடன் வெளிப்படுத்தினர்.
இவ்வாண்டிற்கான முதன்மைத் தலைப்பாக "இயற்கையைப் பாதுகாக்க எனது உறுதிமொழி: பூமித்தாய்க்கு ஒரு கடிதம்" (A Letter to Mother Earth: My Promise to Protect Nature) என்ற தலைப்பில் மாணவர்கள் கடிதங்களை எழுதினர்.
இப்போட்டி 18 வயதிற்குட்பட்டோர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 'இன்லேண்ட் லெட்டர்' (Inland Letter Card - அதிகபட்சம் 500 வார்த்தைகள்) மற்றும் 'கவர்' (Envelope - A4 தாளில் அதிகபட்சம் 1000 வார்த்தைகள்) ஆகிய வழிகளில் மாணவர்கள் தங்களின் கடிதங்களை எழுதினர்.
மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றிபெறும் சிறந்த கடிதங்களுக்கு அஞ்சல் துறை சார்பில் ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன:
மாநில அளவில்: முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000.
தேசிய அளவில்: முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.10,000.
நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினரும், தூத்துக்குடி கோட்ட அஞ்சல் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டினர். மின்னணு சாதனங்கள் நிறைந்த இக்காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் கைகளால் கடிதம் எழுதிப் பழகியது ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது என ஆசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

