குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே கோட்டகம் காஞ்சிரகோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் மனைவி சுவர்ணலட்சுமி. இவர் மார்த்தாண்டம் மார்க்கெட் எதிரே செயல்பட்டு வரும் பெண்கள் துணிக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணிந்து கொண்டு கடைக்குள் வந்த நபர்கள் இருவர், துணி வாங்குவது போல் நடித்துப் பணியிலிருந்த சுவர்ணலட்சுமியின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச் செயினைப் பறித்தனர்.

சுவர்ணலட்சுமி வாலிபர்களுடன் போராடியதில் செயினின் ஒரு பகுதி அவரிடமே எஞ்சியது. இதுகுறித்து சுவர்ணலட்சுமி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துணிக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளைச் சேகரித்துத் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டது கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே பெரும் பழுதுார் பகுதியைச் சேர்ந்த ஜோமோன் (21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

100-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, சம்பவம் நடந்த 3 நாட்களில் குற்றவாளிகளைக் கைது செய்த காவல் துறையினரைக் கன்னியாகுமரி மாவட்ட காவல் எஸ்பி அன்சுல் நாகர் பாராட்டினார்.