உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நாளை (11.10.2026) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இத்திருவிழாவின் முக்கியச் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 20.10.2026 அன்று நடைபெற உள்ளது.

தசரா திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத், தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 1 காவல் உதவி கண்காணிப்பாளர் 5 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் 32 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் (SI) களமிறக்கப்பட்டுள்ளனர்.

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 1,000 காவல்துறையினர் சுழற்சி முறையில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பக்தர்கள் எந்தவித இடையூறாமுமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், பாதுகாப்புடன் விழா நிகழ்வுகளில் பங்கேற்கவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டக் காவல் துறை சார்பில் தீவிரமாகச் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சாதாரண உடையில் 50 காவல்துறையினர் பொதுமக்களுடன் கலந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் முக்கிய இடங்களில் சுமார் 80 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.