கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து, கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி சேவை மையக் கட்டிடத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடின.

உலகம் முழுவதும் அக்டோபர் 11-ஆம் தேதி பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும்; அவர்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தவும் விழிப்புணர்வு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

விஜயாபுரியில் நடைபெற்ற விழாவில், பங்கேற்ற பெண் குழந்தைகளுக்குக் கிரீடம் சூட்டிச் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, குழந்தைகள் அனைவரும் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்குதல் பெண் கல்வி, பாதுகாப்பு, ஊட்டச்சத்து ஆகியவற்றை உறுதி செய்தல் பாலின சமத்துவத்தைப் பேணுதல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும், பங்கேற்ற பெண் குழந்தைகள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகங்கள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்குக் கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க உறுப்பினர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் காயத்ரி வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறுமிகளுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கிப் பேசினார். அப்போது, அரசு செயல்படுத்தும் குழந்தைகள் நலத் திட்டங்கள், பாதுகாப்பு முறைகள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள் (1098) குறித்து விரிவாக விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் விஜயாபுரி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, ஆதிலட்சுமி, ராஜலட்சுமி, மஞ்சன லட்சுமி, ஜனனி உட்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் கனகா நன்றியுரை கூறினார்.