அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்குத் தர்பணம் கொடுத்தனர்.

பொதுவாக ஆடி மற்றும் தை மாத அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்குத் தர்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இநாட்களில் முன்னோர்களுக்குத் தர்பணம் கொடுத்தால் அவர்களின் முழு ஆசியும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், இநாட்களில் தர்பணம் கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை நாட்களிலும் தர்பணம் கொடுப்பது வழக்கமாகும்.

இந்நிலையில், இன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு எள் பிண்டம் மற்றும் தண்ணீர் விட்டு தர்பணம் கொடுத்துவிட்டு, கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.