தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான திருமதி S. சுபாதேவி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், உலக மனநல நாளை முன்னிட்டு முறப்பநாடு கிராமத்தில்சிறப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் துளசி மகளிர் சட்டக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமில் உலக மனநல நாளை முன்னிட்டு சிறப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, துளசி மகளிர் சட்டக் கல்லூரி மாணவிகள் தங்களது சிறப்பான பேச்சின் மூலமும், நாடகமாக நடித்துக் காட்டியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏவி சுபாஷினி முன்னிலையில் போக்சோ சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், குழந்தை திருமணத் தடைச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் ஆகிய முக்கியச் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஹரிஹரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், துளசி மகளிர் சட்டக் கல்லூரி சார்பில் ஜான் ஜூடிட் ரூபினி, முறப்பநாடு மகளிர் குழுத் தலைவி செண்பகம் உட்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்முகாமில் கலந்துகொண்டனர்.