நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள புலியூர்க்குறிச்சியைச் சேர்ந்தவர் மகாராஜா. இவரது மனைவி நம்பி செல்வி (39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் ஏர்வாடியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். வழக்கம் போல், நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததுமே நம்பி செல்வி தனது 2 மகள்களையும் மொபட்டில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் ஏர்வாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென நம்பி செல்வியின் மொபட்டை வழிமறித்து நிறுத்தினர். இதில் அவர் நிலைதடுமாறி நின்ற நிலையில், மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் திடீரென நம்பி செல்வியின் கழுத்தில் இருந்த சுமார் 15 பவுன் தங்கத் தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் குறித்து நம்பி செல்வி அளித்த புகாரின் பேரில், ஏர்வாடி காவல் நிலைய போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பறிபோன தங்கச் சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இத்துணிச்சலான வழிப்பறி சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் தொடர்புடைய சவளைக்காரன்குளம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 25) என்பவரை கைது செய்தனர். பறிக்கப்பட்ட 15 சவரன் செயினுடன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

