பதிவு செய்த நாள் | ஞாயிறு 25, டிசம்பர் 2016 |
---|---|
நேரம் | 5:57:59 PM (IST) |
கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பண்டிகையையொட்டி தூத்துக்குடி நகரில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், ஆலயங்கள் சார்பில் நேற்று இரவு ‘கேரல் பவனி’ நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், சின்னக்கோயில் என அழைக்கப்படும் தூய இருதய பேராலயம், அந்தோணியார் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில் நிர்வாகங்கள் சார்பில் அலங்கார வாகனங்கள் தயார் செய்யப்பட்டு இரவு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டன. ஒவ்வொரு வாகனத்திலும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் இருந்து கொண்டு பரிசுப் பொருள்களையும் இனிப்புகளையும் மக்களுக்கு அவர்கள் வழங்கினர்.அலங்கார வாகனங்கள் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஆலயங்களை சென்றடைந்தன. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.பவனியில் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பவனி முக்கிய ரோடுகளின் வழியாக வலம் வந்தது. மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், இளைஞர்கள், சிறுவர்கள் நடனம் ஆடியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.