பொதுமக்களிடையே இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, 100% தன்னார்வ இரத்தக் கொடையாளர்கள் மூலம் இரத்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில் ‘தேசிய தன்னார்வ இரத்ததான தின விழா’ மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

விபத்துகள், மகப்பேறு கால அவசரங்கள் மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகளின் போது ஏற்படும் திடீர் இரத்தப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான இருப்பை உருவாக்குவதும், பணப் பயன் ஏதுமின்றி பிறர் உயிரைக் காக்கத் தாமாகவே முன்வந்து இரத்தம் வழங்குவதைக் மக்கள் இயக்கமாக மாற்றுவதும் இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

கடந்த ஆண்டில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இரத்ததானம் செய்து பிறர் உயிரைக் காத்த 96 தனிநபர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இதில், அதிக அளவில் இரத்ததான முகாம்களை நடத்தி 165 இரத்த அலகுகளைத் தானமாக வழங்கிய 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளையைப் பாராட்டி, அதன் நிறுவனர் மற்றும் இயக்குநர் பி. ஜாய்சன் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழை வழங்கி மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் மருத்துவர் கலைவாணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பத்மநாபன், இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் சாந்தி, முதுநிலை ஆய்வக நுட்பனர் முத்து ஜெயந்தி, மருத்துவர்கள் மற்றும் திரளான தன்னார்வ இரத்ததானக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.