தமிழ்நாட்டில் நடைபாதைகளிலும், மேம்பாலங்களின் கீழும் எந்தவித பாதுகாப்பும் இன்றி இரவைக் கழிக்கும் வீடற்ற எளிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இரவு நேரப் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரித் தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், திறந்தவெளியில் உறங்கும் வீடற்ற மக்கள் இயற்கைச் சீற்றங்கள், விபத்துகள் மற்றும் சமூக விரோதிகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக நடைபாதைகளில் தங்கும் பெண்களும், குழந்தைகளும் பாலின வன்முறைகளுக்கும் பாதுகாப்பற்ற சுகாதாரச் சூழலுக்கும் ஆளாவதாகவும்; கைவிடப்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவப் பராமரிப்பு கிடைக்காமல் அவதியுறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் போதிய எண்ணிக்கையில் தூய்மையான, பாதுகாப்பான இரவு நேரக் காப்பகங்களை அமைக்க வேண்டும். இக்காப்பகங்களில் இலவச உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறை மற்றும் முதலுதவி வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மறுவாழ்வு மையங்கள் மூலம் வாழ்வாதார உதவிகளையும் மருத்துவ சிகிச்சையையும் வழங்க வேண்டும்.
வீடற்ற மக்களுக்குக் குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை அடையாள ஆவணங்களைப் பெற்றுத் தந்து, சுயதொழில் பயிற்சிகள் மூலம் அவர்களைச் சமூகத்தின் முதன்மை நீரோட்டத்தில் இணைக்க வேண்டும். கண்ணியமான தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் இக்கோரிக்கைகளின் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

